Saturday, January 16, 2021

தமிழன் கண்ட ஆண்டுமுறைகள்

மனிதன் என்பவன் ஓரணுவுயிர் தன்னைத் தானே மேம்படுத்தி, தன்னையும் அறியும் அளவுக்கு கட்டமைத்துக்கொண்ட இயற்கையின் ஒப்புயர்வற்ற வடிவம். அது ஒவ்வொரு கட்டத்திலும் தன்னை மேம்படுத்துவதற்குத் தன்னைச் சுற்றிலுமுள்ள இயற்கையின் பிற கூறுகளை அறிந்தும் தற்செயலாகவும் கொண்ட உறவுகள் அடிப்படையானவை. அவ்வாறு தான் மனிதன் காலக் கணக்கீடும் அமைந்தது.

மனிதனும் சரி விலங்குகளும் சரி தாவரங்களாகிய நிலைத் திணைகளும் சரி தவிர்க்கமுடியாமல் அறியவும் பட்டறியவும் படும் காலப்பாகுபாடு இரவு பகல் என்பதாகும். இந்த இரு காலப் பாகுபாடுகளுக்கிடையில் பல்வேறு உயிர்களின் உயிரியக்கத் தொடர் தவிர்க்க முடியாதபடி பிணைந்துள்ளது. அதற்கு அடுத்தபடியாக மனிதனின் கவனத்தைக் கவர்ந்தது நிலவின் இயக்கம்.


கதிரவனின் ஒளியை இழந்த இரவின் இருளில் தனிக்காட்டு அரசனாக ஆட்சி செய்வது நிலவு. எனவே அதனுடைய ஒவ்வொரு அசைவையும் மனிதனால் வெறுங்கண்களாலேயே நோட்டமிட முடிந்தது. வளர்ச்சி தேய்வு என்ற இரு கோடி நிலைகளுக்குள் ஒரு குறிப்பிட்ட கால இடைவெளியில் அது இயங்கி வந்தது. இரவு பகல் இணைந்த நாள் என்ற காலப்பகுப்புக்கு அடுத்ததாக மனிதன் நிலவின் வளர்வு தேய்வு என்ற இரு கலைகளுக்கும் இடைப்பட்ட காலத்தை, அளக்கும் அலகாகக் கொண்டான். அதையே மனிதனின் வாழ்நாளை அளக்கும் அளவையாகவும் கொண்டான். அவ்வாறுதான் யூத மறை நூலில் தாம் போன்றவர்களின் அகவை தொள்ளாயிரத்துக்கும் கூடுதலாகக் குறிப்பிடப்பட்டுள்ளது. உண்மையில் இன்றுள்ள ஆண்டுக் கணக்கில் அது 80க்கு மேல் வராது. இந்தக் காலப் பகுப்பும் மனிதனின் தேவைகளை நிறைவு செய்யவில்லை.

பருவகாலங்களின் பெயர்ச்சியைத் தடம்பிடித்தல் வேளாண்மை, கடல் செலவு போன்றவற்றுக்கு இன்றியமையாததாக இருந்தது. எனவே நிலவுக்குப் பின்னால் விளங்கும் விண்மீன்களை மனிதன் நோட்டமிட்டான். அவை கூட்டம் கூட்டமாகவும் தனித்தனியாகவும் வான்வெளி எங்கும் பரந்து கிடந்ததைப் பார்த்தான். அது மட்டுமல்ல, அவை இரவு வானில் நிலையான இடங்களைப் பிடித்திருக்கவில்லை என்றும் அவற்றுக்கு ஒரு சுழற்சி இருக்கிறதென்றும் கண்டான். இந்த மீன் கூட்டங்களையும் நிலவையும் வைத்துப் பார்த்தபோது ஒருமுறை நிறைமதியின் பின்னணியில் காணப்படும் மீன் தொகுதி அடுத்த முறை வேறிடத்தில் இருப்பதும் நிலவின் பின்னணியில் வேறொரு மீன் கூட்டம் இருப்பதும் தெரிய வந்தது. இவ்வாறு ஏறக்குறைய 12 நிறை நிலா முடியும் போது நிலவுக்குப் பின் ஏறக்குறைய முதல் நிறை நிலாவுக்குப் பின்னணியில் இருந்த மீன்கூட்டம் தோன்றுவதைப் பார்த்தான். எனவே 12 நிலாச் சுழற்சிகளைக் கொண்ட ஓர் ஆண்டை முதன்முதலாக மனிதன் வடிவமைத்தான். அத்துடன் நிலவுக்குப் பின்னணியில் வரும் மீன்கூட்டங்களுக்கு, தான் விரும்பும் அல்லது தன் கற்பனைக்கு ஏற்ப அல்லது தான் வணங்கும் தெய்வத்தின் அடிப்படையில் ஒவ்வொன்றுக்கு ஒவ்வொரு வடிவம் கொடுத்து அவற்றுக்கு ஓரைகள் என்று பெயரும் கொடுத்தான். ஓரை என்பதற்குத் தமிழில் கூட்டம், மகளிர் கூட்டம் என்பது பொருள். அது காலத்தைக் குறிப்பதாக மாறி ஒரு மணி நேரத்தைக் குறிப்பதாக ஓரா என்று கிரேக்கத்தில் இடம் பெற்றுள்ளது.

மனிதனின் காலப் பகுப்புச் சிக்கல் இத்துடன் முடிந்து விடவில்லை. ஒரு 12 மாதச் சுழற்சியில் நிலவின் பின்னணியில் தோன்றும் ஓரைகள் துல்லியமாக அதே இடத்தில் அடுத்த சுழற்சியில் இருப்பதில்லை. ஓரிரு ஆண்டுகளில் ஓர் ஓரையிலிருந்து அடுத்த ஓரைக்கு நிலவின் இடம் நகர்ந்துவிட்டது. இதைச் சரிக்கட்ட வேண்டிய தேவையும் ஏற்பட்டது. 

அதேவேளையில் தெற்கே மகரக்கோடு எனப்படும் சுறவக்கோட்டில் ஓர் வான் அறிவியல் புரட்சி நிகழ்ந்தது. இங்கு தான் கதிரவனின் தென்-வடல் செலவில் தென்கோடித் திருப்பம் உள்ளது. இந்தக் கோட்டிற்குத் தெற்கில் நிழல்கள் வடக்கே சாய்வதில்லை. இந்த இடத்தில் உள்ளவர்கள் மட்டுமே நோட்டமிடத்தக்க ஓர் இயற்பாடு இது. இந்த இடத்தில் கதிரவன் வரும் ஒரு நாளில் மட்டும் நிழல் சரியாகக் காலடியில் விழும் பிற நாட்களில் தெற்கில் சாயத் தொடங்கும். இந்த நாளை நோட்டமிட்டால் பருவகாலச் சுழற்சிகளைத் துல்லியமாகத் தடம்பிடிக்க முடியும். இதைச் செய்தவன் பெயர் தக்கன் என்பது. இவனைத் தொன்மங்கள் தட்சப்பிரசாபதி என்றும் பிரமனின் மானச புத்திரன் என்றும் அசுரன் என்றும் ஒரே நேரத்தில் குறிப்பிடப்படுகின்றன. தக்கன் என்பது ஒரு தனி மனிதனின் பெயராக இருக்க முடியாது. ஒரு பீடம் அல்லது தலைமையின் பெயராக இருக்க வேண்டும். அதனால்தான் திசையை(தெற்கு) வைத்துப் பெயர் சுட்டப்படுகிறது.


இந்தத் தெற்கன்கள் கதிரவனைப் புவி சுற்றிவருவதால் புவியிலிருந்து பார்க்கும்போது கதிரவன் தென்வடலாக நகர்வது போல் தோற்றமளிப்பதை மட்டும் நோட்டமிடவில்லை; கதிரவனின் தன்சுழற்சியால் ஏறக்குறைய 27⅓ நாட்களுக்கு ஒருமுறை கதிரவனின் கரும்புள்ளிகள் புவியை நோக்கி வருவதையும் அதனால் புவியிலுள்ள காந்தப்புலங்கள் தடம் புரள்வதையும் அதனால் கடலில் செல்லும் கலன்களிலுள்ள திசைமானிகள் தவறான திசை காட்டுவதையும் நோட்டமிட்டு அதனடிப்படையில் வான்வெளியை 27 பகுதிகளாகப் பிரித்து அவற்றுக்கு நாள்மீன்கள்(நாள் + சத்திரம் + இருக்குமிடம் = நட்சத்திரம்) என்ற பெயரும் இட்டனர். அத்துடன் சந்திரனை நோட்டமிட்டுக் கிடைத்த வானின் 12 பகுப்புகளான ஓரையைக் கதிரவனின் இயக்கத்துடன் இணைத்து சுறவம்(மகரம்), கும்பம், மீனம் என்ற மாதங்களையும் வகுத்தனர். அம்மாதப் பெயர்கள் இன்றும் கொல்லம் ஆண்டு முறையில் மாதப் பெயர்களாக மட்டும் நின்று நிலவுகின்றன.


அது மட்டுமல்ல, கதிரவன் தொடர்பான 27 பகுப்புகளை உடைய நாள் மீன்களை நிலவின் சுழற்சியுடன் இணைத்தனர். இது தொன்மக் கதை வடிவில் உள்ளது. தக்கன் தன் பெண்களில் 27 பேரை நிலவுக்கு (சந்திரனுக்கு) மணம் முடித்துக் கொடுத்தான். அவர்களின் பெயர்கள் கார்த்திகை, ரோகிணி என்று வருபவையாகும். காலத்தைக் கணித்ததால் காலன் என்றும், சாமங்கள் எனப்படும் யாமங்களை வகுத்ததால் இயமன் என்றும் அறியப்படுபவர்களும் இவர்களே. இயமன் தென்திசைக் கடவுள். யாமதிசை என்பது தென்திசை. இயமன் கதிரவனின் மகன் என்றும் கூறப்படுகிறான். ஆக, வானியல் தொடர்பான அடிப்படைகளை உருவாக்கியவர்கள் வாழ்ந்த இடம் சுறவக் கோட்டுப் பகுதியே ஆகும். எனவே அவர்கள் வகுத்த ஆண்டுப் பிறப்பும் கதிரவன் தென்கோடியில் இருக்கும் சுறவத் திருப்பத்துக்கு வரும் நாளான திசம்பர் 21/22 அன்றாகவே இருந்திருக்கும். இராவணனது இலங்காபுரியும் இதே சுறவக்கோட்டில் தான் இருந்தது. தாமிரபரணி
எனும் நிலப்பரப்பில் நிழல் தெற்கில்தான் விழுந்தது என்று கிரேக்க ஆசிரியர்கள் பதிந்துள்ளனர். அத்துடன் இராவணனைப் பற்றிய தொன்மச் செய்தி அவன் கதிரவனைத் தன் நாட்டினுள் வரவிடாமல் தடுத்தவன் என்பதாகும். இது இராவணனது தலைநகர் ஒன்றேல் சுறவத் திருப்பத்திற்குத் தெற்கே அல்லது கடகத் திருப்பத்திற்கு வடக்கே இருந்திருக்க வேண்டும் என்பதாகும். ஆனால் தெற்கே என்பதற்குத்தான் சான்றுகள் உள்ளமையால் அவன் சுறவத் திருப்பத்தில் இருந்தான் என்பதோடு அவனது ஆண்டும் திசம்பர் 21/22 நாட்களில் தான் பிறந்திருக்கும். சுறவக் கோட்டிலிருந்த நிலப்பரப்பு அழிந்ததாலோ அல்லது கடலினுள் அமிழ்ந்ததாலோ அல்லது நிலநடுக்கோட்டில் வாழ்ந்த மக்கள் நாகரிக உயர்வு எய்தியதாலோ, நிலநடுக்கோட்டில் தங்கள் தலைநகரை நிறுவி தங்கள் ஆண்டுப்
பிறப்பை மார்ச் 21/22 இல் வைத்துக் கொண்டனர். இதற்கான அடிப்படை வானியல் அறிவை தெக்கர்கள் வகுத்துத் தந்திருந்தனர்.


இந்த நிகழ்வுகளுக்கு ஊடாக, ஏற்கனவே நிலவின் சுழற்சியின் அடிப்படையில் மாதங்களை வைத்திருந்த மக்களின் இடையில் நிலா மாதங்களைக் கதிரவனின் சுழற்சியில் அடிப்படையில் வகுக்கப்பட்ட புதிய ஆண்டு முறையுடன் இணைக்கும் ஒன்றுக்கு மேற்பட்ட உத்திகள் புனையப்பட்டன. அவற்றுள் சிலவற்றைப் பார்ப்போம்.


  1. சுமார்த்த ஆண்டு. இது வளர்பிறை முதல் பக்கத்தில் தொடங்கி அடுத்த காருவா (அமாவாசை) அன்று முடியும் 12 மாதங்களைக் கொண்ட ஆண்டில் 2½ ஆண்டுகளுக்கு ஒரு மாதத்தைச் சூனிய மாதம் என்று கழித்து விடுவது.
  2. எட்டு ஆண்டுகளில் முதல் நான்கு ஆண்டு முடிவில் இரண்டு மாதங்களும் அடுத்த நான்கு ஆண்டுகளின் முடிவில் ஒரு மாதமுமாக மூன்று மாதங்கள் ஒலிம்பிக் ஆட்டங்களில் செலவு செய்து கழிப்பது. இதை சியார்சு தாம்சன் என்ற இங்கிலாந்தைச்சேர்ந்த கிரேக்க மொழிப் பேராசிரியர் தன் நூலொன்றில்் (Aeschilles and Athens) கூறியுள்ளார்.
  3. 19 ஆண்டுகளுள்ள ஓர் ஆண்டுச் சுழற்சி. இதில் 7 ஆண்டுகள் 13 நிலவு மாதங்களைக் கொண்டிருக்கும். இந்த ஆண்டு முறை யூதர்கள், சீனர்கள் இடையேயும் தென்கிழக்காசிய நாடுகளிலும் நடைமுறையிலுள்ளது. இந்த ஆண்டுப் பிறப்பன்று நம் பஞ்சாங்கங்கள் எனப்படும் ஐந்திறங்களில் 'துவாபர யுகாதி' என்ற குறிப்பு இருக்கும் எனவே இந்த ஆண்டு முறையை வகுத்தவர்களும் நம் முன்னோர்களே என்பது தெளிவு.

வானியலில் எந்த ஒரு வான் பொருள் அல்லது வான்பொருள் தொகுதியின் இயக்கத்தின் கால அளவை இன்னொரு அதைவிடச் சிறிய வான் பொருள் இயக்கத்தின் முழு எண்ணாகப் பார்க்கவே முடியாது.


நம் மூதாதையர் கதிரவனின் கோள்களில் புவி தவிர்த்த ஐந்தையும் ஒரு துணைக்கோளான நிலவையும் கதிரவனையும் சேர்த்து நாட்களுக்குப் பெயரிட்டனர். வெள்ளி, செவ்வாய், பொன்(வியாழன்) என்ற பெயர்கள் அக்கோள்களின் நிறத்துக்குப் பொருந்தி வருவது அவர்களது வானியல் ஆய்வின் நுண்மைக்குச் சான்றாகும்.


இந்த ஏழு நாட்களையும் அடிப்படையாகக் கொண்டு மாதத்துக்கு 4 வாரங்கள், எனவே 28 நாட்கள் என்று வைத்து ஏற்கனவே வகுக்கப்பட்ட 27 நாள் மீன்களுடன் அபிசின் என்றொரு நாள் மீனைச் சேர்த்து 28 நாட்கள் உள்ள ஒரு மாதத்தையும் 28 x 12 = 336 நாட்கள் கொண்ட சாவனம் என்ற ஆண்டு முறையையும் கடைப்பிடித்துக் கைவிட்டிருப்பதற்குத் தடயம் உள்ளது (பார்க்க - அபிதான சிந்தாமணியில் சம்வச்சரம் என்ற சொல்லின் விளக்கம்)


அது போல் 30 நாட்களைக் கொண்ட 12 மாதங்கள் 360 நாட்களைத்தான் தரமுடியும். ஆனால் புவியின் ஒரு தென்வடல் திரும்பல் 365 'சொச்சம்' நாட்கள் ஆகும். இருப்பினும் வட்டத்தின் பாகைகள் 360 என்பது இந்த 365 'சொச்சத்'தின் தோராயப்பாடு ஆகும்.


இந்த 365 'சொச்சம்' நாட்களை முறைப்படுத்த எத்தனையோ உத்திகளை நம் முன்னோர்கள் கையாண்டுள்ளனர். அவற்றில் ஒன்று, சோதிக் ஆண்டு (sothic year)
எனப்படும் 365 நாட்களைக் கொண்ட 1460 ஆண்டுகளின் சுழற்சியாகும்.


கதிராஆண்டு 365 நாட்கள் 5 மணி 48 நிமையங்கள், 46 நொடிகள் தோராயமாகக்(!)
கொண்டது. 365 நாட்கள் போக 'சொச்சத்தைத் தோராயமாக கால் நாள் என்று எடுத்துக்கொண்டால் அதைச் சரி செய்ய நான்கு ஆண்டுக்கு ஒரு 'தாண்டு ஆண்டு'
வகுத்துள்ளனர் ஐரோப்பியர். அப்போதும் கூடுதலாக்க கணக்கிடப்படும் 11 நிமைய 14 நொடி 'சொச்சத்'தைச் சரிக்கட்ட 400 ம் ண்டை 365 நாள் கொண்ட இயல்பு ஆண்டாக வைத்துள்ளனர். அப்போதும் சிறிது 'சொச்சம்' விழும். அது சிக்கல் தரும் அளவுக்கு வருவதற்குப் பலநூறு நூற்றாண்டுகள் ஆகும். அப்போது பார்த்துக் கொள்ளலாம்.


நாம் மேலே குறிப்பிட்ட சோதிக் ஆண்டு எகிப்தியர்களால் கையாளப்பட்டதாக CHAMBERS TWENTIETH CENTURY DICTIONRY 1972 கூறுகிறது (பார்க்க - sothic year)

ஆண்டுக்கு 365 'சொச்சத்'தைக் கால் என்ற எடுத்துக் கொண்டால் 365 நாட்களைக் கொண்ட 1460 ஆண்டுகளில் 1460 / 4 = 365 நாட்கள் கொண்ட ஒரு முழு ஆண்டு குறைவுபடும். அப்போது ஒரு முழுச் சுழற்சியாக ஓரைகள் தம் பழைய நிலைக்கு
வந்திருக்கும். ஆனால் அதற்குள் பருவகாலங்களின் கணிப்பு பெரும் சிக்கலாகப் போயிருக்கும். நிலவு மாதங்கள் 12ஐக் கொண்ட ஆண்டு முறையுடன் ஒப்பிடும்போது இது அதிகச் சிக்கல் வாய்ந்ததாகும். இந்தச் சூழலில் உருவாக்கப்பட்டதுதான் சிவவாக்கியர் பெயரில் நிலவும் வாக்கியப் பஞ்சாங்கம் என்று தோன்றுகிறது. அறுபது ஆண்டுகள் சுழற்சியுடைய ஓர் ஆண்டு முறையாகும். ஆனால் இதுவும் ஒரு தோராயப்பாடே. உண்மையில் 59 ஆண்டுகளில் முன்பு வந்த திதிகள் மீண்டு வருகின்றன. அதுபோல் வியாழனின் சுழற்சியும் துல்லியமாக 12 ஆண்டுகள் அல்ல, அதைவிடவும் சிறிது குறைவு. எகிப்தியர்கள் இந்த சோதிக் ஆண்டு முறையை மேம்படுத்தியிருப்பார்கள். ஏனென்றால் அவர்களிடமிருந்து தான் சூலியர் சீசர் இன்றைய கிறித்தவ ஊழியின்
மூல வடிவத்தை உரோமுக்குக் கொண்டு சென்றார்.

நம் மூதாதையர்களில் ஒரு பகுதியினர் சென்று கலந்ததால் எகிப்து மிசிரத்தானம் என்ற வழங்கப்படுவதாக கதிரைவேற்பிள்ளையின் தமிழ் மொழி அகராதி கூறுகிறது. மிசிரம் என்ற சொல்லுக்கு கலப்பு, சமம் என்ற பொருள்களையும் அது தருகிறது.


துருக்கரால் மிசிரு என்ற வழங்கப்படுகிற ஒரு தேசம், தற்காலத்தில் ஐரோப்பியர்களால் ஈசிப்ட் என்று வழங்கப்படுகிறது. யயாதியால் தன் தேசத்தினின்றும் ஓட்டப்பட்ட அவன் புத்திரர் நால்வரும் இந்த மிலேச்ச தேசத்திற் சென்று அத்தேசத்து அரசராகி அந்த தேசத்துச் சனங்களோடு கலந்தமையால் இது மிசிரத்தானம் என்னும் பெயருடைத்தாயிற்று.


இந்தக் கருத்தை உறுதி செய்யும் சான்றுகள் உள்ளன. ஆனால் அது நாம் எடுத்துக்கொண்ட பொருளிலிருந்து நம்மை நெடுந்தொலைவு கொண்டுசென்று விடும்
என்பதால் தவிர்க்கிறோம்.

நம் மூதாதையர்களிடமிருந்து ஒவ்வொரு காலகட்டமாக இடம் பெயர்ந்த மக்களிடமிருந்து நம் ஆண்டு முறைகள் எகிப்து வழியாகவும் வேறு வகைகளிலும் ஐரோப்பாவை எட்டியுள்ளன.


மீண்டும் இந்துமாக்கடல் பகுதிக்கு வருவோம். நிலநடுக்கோட்டில் தலைநகரமைத்த நம் முன்னோர் அங்கு கதிரவன் நேர் மேலே வரும் நாளை ஆண்டுப் பிறப்பாகக் கொண்டனர். அப்போது அமைந்ததுதான் மேழம்(மேடம்), விடை(இடபம்), ஆடவை(மிதுனம்) என்ற மாதங்களைக் கொண்ட ஆண்டு முறை. இந்த ஆண்டு முறை 16 ம் நூற்றாண்டு வரை ஐரோப்பிய நாடுகள் பலவற்றில் வழக்கில் இருந்துள்ளது.


12 ஓரைகளில் 4 ஓரைகளை சரராசிகள் என்று தமிழ்மொழி அகராதி கூறுகிறது. அவை கடகம், துலாம், மகரம், மேழம் ஆகியவை. இந்த நான்கு ஓரைகளும் கதிரவன் தன் தென்வடல் செலவில் முறையே வடகோடியிலும் நில நடுக்கோட்டிலும் அடுத்து
தென்கோடியிலும் மீண்டும் நிலநடுக்கோட்டிலும் வரும்போது நுழையும் முகமையான புள்ளிகளில் இருப்பவை. இவற்றின் அடிப்படையில் ஆண்டுகளை சம்சத்சரம், பரிவத்சரம், இடவத்சரம் என்ற வரிசையில் 5 ஆண்டுகளாகப் பிரித்துள்ளனர். இவற்றில் சம்வத்சரம் என்பதற்கு சம்வச்சரம் என்ற சொல்லின் அடியில் ''அயன, ருது, மாத, வார' அவயவங்களுடன் கூடிய அவயவி சம்வச்சரம் எனப்படும். அது பன்னிரண்டு மாதங்களுடன் கூடியது. இவ்வருடம் சாந்தரமானம், செளரமானம், சாவனம் என மூவிதப்படும். இதில் சாந்த்ரமான வருடம் சித்திரை மாத சுக்ல பிரதனம் முதல் பங்குனி மாதப் பெளரணை வரை கணிப்பதாம். செளரம் சித்திரை முதல் பங்குனி கடைசி வரையில் கணிப்பது. சாவனம் முந்நூற்று முப்பத்தாறு
நாட்களைக் கொண்டது.'' என்கிறது அபிதான சிந்தாமணி.


தமிழகத்தில் ஆடி(கடகம்)ப் பிறப்பைக் கொண்டாடும் வழக்கம் உள்ளது. குமரி மாவட்டத்தில் முன்பு ஆண்டுப் பிறப்பை மாதப் பிறப்பு என்றுதான் கூறுவர். கொல்லம் ஆண்டு ஆவணி மாதம் பிறப்பதால் அதை மாதப் பிறப்பு என்பவர்கள்
ஆடிமாதப் பிறப்பையும் மாதப்பிறப்பு என்றுதான் குறிப்பிட்டனர். அது மட்டுமல்ல, ஆடிப் பிறப்பன்று மேளம் கொட்டுவோர் வீட்டுக்கு வீடு மத்தளம் கொட்டி கை நட்டம் பெறுவர். தமிழ்நாட்டின் பிற பகுதிகளில் இதை போணி பண்ணுதல் என்று குறிப்பிடுவர். ஐப்பசி மாதப் பிறப்பை ஐப்பசி விசு என்று கொண்டாடும் மரபும் உள்ளது. கதை, சித்திரை, ஆடி, ஐப்பசி ஆகிய நான்கு மாதங்களில் ஆண்டுப் பிறப்புகளையுடைய ஆண்டு முறைகளுடன் கொல்லம் ஆண்டு போன்று இந்த நான்கு ஆண்டு முறைகளிலும் சேராத ஆண்டு முறைகளையும் சேர்த்துத்தான் சம்வத்சரம் தொடங்கி ஐந்து ஆண்டுமுறைகளாக நம் முன்னோர் வகுத்துள்ளனர். இதைத் தவறாக உணர்ந்து 5 ஆண்டுகள் கொண்ட வேத யுகங்கள் என்று தவறாகச் சில ஆய்வாளர்கள் முடிவு கட்டியுள்ளனர்.


இனி, நிலநடுக்கோட்டில் தலைநகரை வைத்திருந்த நம் முன்னோர் கடற்கோளுக்குப்
பின் வடக்கு நோக்கி நகர்ந்து கபாடபுரத்தில் தலைநகரை அமைத்தபின் அங்கு நேர்மேலே கதிரவன் வரும் நாளில் ஆண்டு முறையை வைத்தனர். அது ஏறக்குறைய 23/24 நாட்கள் பின் சென்று விட்டது. இப்போது கதிரவன் இருக்கும் ஓரைக்கும் மாதங்களுக்குமான ஒத்திசைவு முறிந்துவிட்டது. எனவே முழுநிலா நாளில் நிலவு இருக்கும் ஓரையில் அடங்கிய நாள்மீன்களில் முதல் நாள்மீன் பெயரை அந்த
மாதத்துக்கு வைத்தனர். அவ்வாறுதான் சித்திரை, வைகாசி என்ற மாதப் பெயர்கள் புழக்கத்துக்கு வந்தன. ஆனால் அதனோடு திசம்பர் 21/22 இல் வரவேண்டிய தைப் பொங்கல் சனவரி 14/15 இல் இடம் பெறுகிறது.


கதிரவன் ஒரு குறிப்பிட்ட இடத்துக்கு நேரே வரும் நாளைப் போற்றுவது நமது மரபு. சில கோயில்களில் கதிரவன் அவ்வூருக்கு நேர் மேலே கதிரவன் வரும் நாளில் தெய்வப்படிமத்தின் மீது கதிரவன் ஒளி படும் வகையில் துளைகள் இட்டிருப்பதைக் காணலாம். அதை விடப் பெரும்பான்மையாக கதிரவன் நிலநடுக்கோட்டில் வரும் நாளை ஒட்டி மார்ச் 19 - 22 நாட்களில் படிமத்தின் மீது ஒளிபடும் வகையில் கூரையில் துளையிட்டிருப்பார்கள். இவை நம் மரபில் ஊறியிருக்கும், ஆனால் அறிவறிந்து வெளிப்படாத நம் பண்டைய அறிவியல் தொழில்நுட்ப மேன்மையைக் காட்டுகிறது. இதை அறிவறிந்த அறிவியலாக
பாதுகாக்கப்பட்ட. தொழில்நுட்பமாக வளர்க்க நாம் கடமைப்பட்டுள்ளோம். கதிரவன் நேர் மேலே வரும் சித்திரை பத்தாம் நாள் உழவு, விதைப்பு, நடவு செய்வது சிறப்பு என்று குமரி, நெல்லை மாவட்ட மக்கள் நம்புகின்றனர்.


காலத்தைக் காட்டும் நாழிகை வட்டிலில் உள்ள கோலின் நிழல் நேர் மேற்காக விழும் நாளில், அதாவது கதிரவன் நேர் மேலே இருக்கும் நாளில் மதுரை அரண்மனைக்குக் கால்கோள் செய்யப்பட்டதாக நெடுநல்வாடை கூறுகிறது. இந்த அடிப்படையில்தான் கபாடபுரத்தில் ஆண்டுப் பிறப்பு மாற்றியமைக்கப்பட்டுள்ளது.


இந்த மாற்றப்பட்ட மாதப்பிறப்பு அப்படியே எகிப்து சென்று அங்கிருந்து உரோமுக்குச் சென்று இன்று கிறித்துவ ஊழியாகி நிற்கிறது. 16 ஆம் நூற்றாண்டில் போப் கிரிகோரி 10 நாட்களை முன்கூட்டி நாட்காட்டியைத் திருத்தியதாலும் பின்னர் மூன்று தவணைகளாக ஒவ்வொரு நாளை முன் கூட்டியதாலும் நம் தைத் தொடக்கத்தைவிட கிறித்துவ ஆண்டு 13 நாட்கள் முந்திப் போய்விட்டது. உண்மையில் அதற்கு முன் சனவரியும் தை மாதமும் ஒரே நாளில்தான் பிறந்தன. ஏப்ரலும் சித்திரையும் அவ்வாறே. இந்தத் திருத்தத்திற்கு போப் கிரிகோரி கூறிய சாக்குப் போக்கு பொருளற்றது. நட்சத்திரமான ஆண்டு எனப்படும் sidereal ஆண்டு முறைப்படி காலம் ஒதுக்காமல் விட்டால் கிறித்துவப் பண்டிகையின் காலம் தப்பிவிட்டது என்ற காரணத்தை அவர் சொன்னார். 

ஆனால் நமது வாக்கியப் பஞ்சாங்கத்தில் நட்சத்திரமான ஆண்டைக் கணக்கில் எடுக்க வேண்டிய தேவையே இல்லை. கதிரவனின் கடகம் சுறவம் இடையிலான செலவு ஒன்று நாண்மீன்கள் எனப்படும் கதிரவனின் தன் சுழற்சி, நிலவின்க கலைகளின்மாற்றம் மற்றும் இரண்டு தனித்தனி மாறுவான்களைக் கொண்டு வான்பொருட்களின் வெவ்வேறு தொகுப்புகளின் இயக்கத்தை ஒன்றுக்கு ஒன்று சார்பில்லாமல் தருகின்ற மிகத் துல்லியமான கணிப்புகளாக உள்ளது வாக்கியப் பஞ்சாங்கம். அவற்றைப் பயன்படுத்தி கடலில் செல்வோரும் உழவரும் ஆயர்களும் குயவர்களும் என்ற அனைத்துத் துறையினருக்கும் பயன்படும் வகையில் வடிவமைக்கப்பட்டதாகும். 

வான்பொருட்களின் இயக்கத்தின் இடைவினைப்பாட்டால் மனிதனின் உடல் உள்ளம் ஆகியவற்றுக்கும் அவனது குமுகவியல், புவியியல், வானியல் சூழலுக்கும் ஏற்படும் பாதிப்புகளை முன்கணிப்பதாக வடிவமைக்கப்பட்டு இன்று திசைமாறி நிற்கும் சோதிடத்துக்கும் நம் பஞ்சாங்கங்கள் தாம் அடிப்படையானவை.


போப் கிரிகோரியின் திருத்தங்களுக்கு முன்பு நமது ஆண்டு முறையும் ஐரோப்பியர்களின் ஆண்டு முறையும் ஒத்திருந்தது என்பதைப் பார்த்தோம்.


'சித்திரை சித்திரை திங்கள் சேர்ந்தன' என்று ஏறக்குறைய 1800 ஆண்டுகளுக்கு முன் இளங்கோவடிகள் பாடியபோது இருந்ததைப் போன்றுதான் இன்றும் சித்திரை மாத நிறைமதி சித்திரை நாள் மீனில் தான் வருகிறது என்பது நமது ஆண்டுமுறை நட்சத்திரமான ஆண்டுக்கு ஈடுகொடுத்து நிற்கிறது என்பதற்கு அசைக்க முடியாத சான்று.


மதம் அற்றவர்கள் (Pagans) என்று தங்களால் தூற்றப்படும் தமிழர்களுடைய மாதப் பிறப்பும் தங்கள் மாதப்பிறப்பும் ஒன்றாக இருப்பது பிடிக்காமல் அவர் செய்த அதிரடி நடவடிக்கையே இது. இத்துடன் அவரது அரசியல் நின்றுவிடவில்லை. அதுவரை நாளின் தொடக்கம் இராவணனின் தென்னிலங்களையையும் பண்டை அவந்திநாட்டின் தலைநகரான உச்சையினியையும் தொட்டு ஓடிய லங்கோச்சையினி மைவரை(meridian)யிலிருந்து கணிக்கப்பட்டு வந்தது. ஒரு புதன்கிழமைக்கு அடுத்து வெள்ளிக்கிழமை வரும் வகையில் வியாழக்கிழமையைக் கழித்து அவர் ஆணை
பிறப்பித்ததால் நாள் மேலைநாடுகளில் தொடங்குவதாக மாறிவிட்டது.


பஞ்சாங்கங்கள் சமயம் சார்ந்த அரசியலைக் கொண்டு இன்றும் விளங்குகின்றன. தமிழ்நாட்டிலுள்ள பஞ்சாங்கங்கள் சிலவற்றில் காஞ்சி சங்காரச்சாரியின் சான்றிதழ் இடம் பெற்றிருப்பதைக் காணலாம். ஆனால் இங்கிலாந்து நாட்டில் வெளிவரும் வெட்டேகர் பஞ்சாங்கத்தில் ஊர்திகளை ஓட்டிச் செல்வோர் முன் விளக்குகளை ஒவ்வொரு மாலையிலும் எப்போது எரியவிடத் தொடங்கி காலை எத்தனை மணிக்கு அணைக்க வேண்டும் என்பது போன்ற செய்திகள் தரப்பட்டுள்ளன.


2008இல் தமிழக அரசு யாரோ 'ஐந்நூறு தமிழறிஞர்கள்' வேண்டுகோளுக்கு இணங்க
தமிழ் ஆண்டுப் பிறப்பைத் தை முதல் நாளில் நிறுவி திடீரென ஆணை பிறப்பித்துள்ளது. இது தேவையற்ற ஒன்று. தமிழ் ஆண்டு முறையில் மாற்றம் வேண்டுமாயின் இடையில் நிகழ்ந்த கடற்கோள்கள் இடப் பெயர்ச்சிகளால் திரிவுறும் முன்னர் தமிழர்கள் நிலநடுக்கோட்டில் இருந்தபோது கடைப்பிடித்த மேழம், விடை, ஆடவை என்ற ஓரைப் பெயர்களைக் கொண்ட மாதத்தை அறிமுகம் செய்யலாம்.


இந்தியா விடுதலை அடைந்த பின்னர் இந்திய அரசாங்கம் உருவாக்கிய அறிஞர் குழு வடிவமைத்த சக ஆண்டு இதற்குப் பொருத்தமானது. மாதப் பெயர்களை நாள் மீன் பெயர்களாயிருப்பதிலிருந்து ஓரைகளாக மாற்றினால் போதும்.


மார்ச் 21/22 உலகின் தென்முனையிலிருந்து வடமுனை வரை இரவும் பகலும் சமமாக
இருக்கும் நாள். அனைத்து உயிர்களுக்கும் கதிரவன் தன் கதிர்களைப் பரப்பி அருள் வழங்கும் நாள். அது தான் ஆண்டுப் பிறப்பாக உலக முழுவதும் கடைப் பிடிக்கத்தக்க நாள். கடகக் கோட்டுக்கு வடக்கில் இருந்து கொண்டு கதிரவன் சுறவக் கோட்டின் அருகில் இருக்கும் ஒரு நாளை ஆண்டுப் பிறப்பாகக் கொண்டாடும் ஐரோப்பியர்களுக்கும் இந்த உண்மையை எடுத்துரைத்து அவர்களும் இந்த ஆண்டுமுறையைக் கடைப்பிடிக்குமாறு அறிவுறுத்தும் தகுதி நமக்கு உண்டு.

ஏனென்றால் உலகில் தோன்றிய அனைத்து ஆண்டுமுறைகளையும் படைத்தவர்கள் நாம்.
உலகில் கதிரவனின் தென் வடல் செலவினை அடிப்படையாக வைத்து 365 சொச்சம் நாட்களைக் கொண்ட ஆண்டு முறையை வகுத்து அதை இன்று வரை பாதுகாத்து வருபவர்கள் உலகில் தமிழர்கள் மட்டுமே. 60 ஆண்டுச் சுழற்சியும் நமக்கே உரியது. ஆண்டுப் பெயர்கள் சமற்கிருதத்தில் இருப்பதால் பெரும்பாலான தமிழறிஞர்கள் அதனைத் தமிழர்களுக்குரியவையல்ல என்று நம்புகிறார்கள்.

முழுமையான வரலாற்று ஆய்வு இல்லாத சூழ்நிலையில் ஐரோப்பிய அரசியல் பின்னணியில் உருவாகிய ஆரிய இனம் பற்றிய போலிக் கோட்பாடும் சமற்கிருதம் அவர்களுடைய மொழி என்பதும் தமிழறிஞர்களுக்கு இத்தகைய மயக்கத்தை ஏற்படுத்தி உள்ளன.


பஞ்சாங்கங்களில் நம் வானியல் அறிவுகள் அனைத்தும் இன்றைய மேலையர் எய்தியவற்றைவிட எந்தவகையிலும் குறையாத வகையில் உள்ளன. அது போல பிற அறிவுத்துறைகள் அனைத்தும் கோயில் ஆகமங்களில் அடங்கியுள்ளன. அவற்றை ஆய்வோம். புதையல்களை வெளிப்படுத்துவோம். பஞ்சாங்கம் என்பது ஆங்கில காலங்காட்டியில் Tthirty days for September April June and November என்பது போன்ற எளிய வாய்ப்பாடுகள், கைவிரல்களின் மூட்டுகளைத் தொடுதல் ஆகிய எளிய முறைகளில் எளிய மக்கள் நினைவு வைத்துக் கொள்ளத்தக்கதாக இருக்க வேண்டும். பண்டை நாட்களைப் போல ஊர்ப்பெரிய மனிதரிடம் அல்லது பூசாரியிடம் மக்கள் கைகட்டி நிற்கும் திக்கக் கருவியாக அமைந்து விடக்கூடாது என்ற கண்ணோட்டத்தில் பஞ்சாங்கங்களை மாற்றியமைக்க வேண்டும்.


வாக்குப்பெட்டி எனும் மாய்மாலப் பெட்டியைப் பற்றிக்கொண்டு அதிகாரத்துக்கு வந்தவர்களும் அவர்களை அண்டி வாழ்கின்றவர்களும் செய்கிற அழிம்புகளை
உலககெங்கும் மனிதர்கள் திருத்துவார்கள். திருத்துவோம்.


(இக்கட்டுரை தமிழினி பிப்ருவரி-2008 இதழில் வெளிவந்துள்ளது.)

தையும் பொய்யும்

முன்னோட்டம்

தமிழ் அறிவுச் சூழலில், கடந்த 30 ஆண்டுகளாகத் தொடரும் சர்ச்சைகளில் ஒன்று23-tamil-new-year300 தமிழ்ப்புத்தாண்டு தொடர்பானது.  சித்திரை முதல் நாளை தமிழ்ப் புத்தாண்டு என்று சமூகம் வழங்கிய பழக்கத்துக்கு மாற்றாக தை முதல் நாளே தமிழ்ப்புத்தாண்டு என்று நிறுவும்  முயற்சியில்,  முடிவே இல்லாத வாதங்கள் தொடர்கின்றன. தை முதல் நாளே தமிழாண்டு தொடக்கம் என்ற உலக பரந்துரை மாநாடு 2001-ல் கோலாலம்பூரில்  சில அமைப்புகளால் முன்னெடுக்கப்பட்டது. தமிழ் நாட்டில் தி.மு.க அரசு 2008-ல் தைப்பொங்கலை தமிழ்ப்புத்தாண்டாக அதிகாரப்பூர்வமாக அறிவித்தது. ஆனால், 2012-ல் அதிமுக அரசு அச்சட்டத்தை நீக்கி சித்திரையையே மீண்டும் தமிழ்ப்புத்தாண்டாக்கியது.  இந்த  அரசியல் விளையாட்டுகளுக்கு அப்பால், பொதுமக்களின் மனம் சித்திரையையே தமிழ்ப் புத்தாண்டாக ஏற்று செயல்படுவதைக் கண்கூடாகக் காணமுடிகின்றது. ஆகவே, இருதரப்பு வாதங்களில் எது சரியானது என்று முடிவுசெய்து சொல்லும் அதிகாரத்தை இக்கட்டுரையின் வழி கையில் எடுப்பது என் நோக்கம் அல்ல. ஆனால், தை முதல் நாளான பொங்கல் விழாவைத் தமிழ்ப்புத்தாண்டு என்று நிறுவும் பல ஆண்டுகால முயற்சிக்கு ஆதரவு சேர்க்கும் பொருட்டு வலிந்து செய்யப்படும் வரலாற்றுப் பிழைகளையும் திரிபுகளையும் மட்டுமே சுட்ட விழைகிறேன். தரவுகளையும் ஆதாரங்களையும் சார்ந்து, தீர ஆராய்ந்தபின் கிடைக்கப்பெறும் இறுதி கண்டடைவுகளை ஒளிவு மறைவின்றி முன்வைப்பதே அறிவுத்தேடலின் அடிப்படை விதி. இக்கட்டுரையின் நோக்கமும் அதுவே.

குறுங்குழு பிரிவினைகள்

ட்சமகால தமிழர் பண்பாட்டு சூழலைக் கூர்ந்து கவனிக்கும் எவருக்கும் தெளிவாக தெரிவது அதன் அடிப்படை கூறுகளில் தொடர்ந்துகொண்டிருக்கும் சர்ச்சைகள்தான். கருத்தியல் சார்ந்தும் அரசியல் சார்ந்தும் தரப்புகளை வரித்துக்கொண்டு நிகழ்த்தப்படும் சர்ச்சைகள் தமிழர் வாழ்வியலில் பிரிவினைகளையும் குழப்பங்களையும் நிலையானவையாக்கி விட்டிருக்கின்றன. சடங்குகள், விழாக்கள், பண்டிகைகள் என எல்லா நிகழ்வுகளும் இருதரப்பு கருத்தாக்கங்களுக்கு இடையில் சிக்கிக் கொண்டு முனகிக் கொண்டிருக்கின்றன. வடக்கு×தெற்கு, தமிழர்×பிராமணர், திராவிடர்×ஆரியர், தமிழர்×வடுகர் எனக் கடந்த 100 ஆண்டுகளில் தமிழ்ச்சூழலில் தொடர்ந்து கொண்டிருக்கும் தரப்புகளின் போராட்டங்களால் சாமானியத் தமிழர் வாழ்வியலில் சந்தேகங்கள் குவிந்து கிடக்கின்றன.

தமிழை மீட்டெடுத்து அதன் பழைமை சிறப்புகளுடன் முன்னிறுத்தும் அடிப்படைப் போராட்டத்துடன் பல்வேறு அரசியல் மாற்றங்களும் சமூகவிரோத போக்குகளும் மக்களின் புரிதல்களுக்கு எதிராக இருந்ததால் அவை தொடர்ந்து சர்ச்சையாக நீடிக்கின்றன. பெரும்பாலும் சர்ச்சைகளை முன்னின்று நடத்திக் கொண்டிருப்போர் தமிழின் அறிவுச்சூழலோடு தங்களைப் பிணைத்துக் கொண்டிருப்போர்தான். சாமானிய மக்கள் எப்போதும் பார்வையாளர்கள்தான். அவர்கள் சரி பிழை என்ற முடிவுகளுக்குள் போவதில்லை. கடந்த காலங்களில் சமூகம் ஏற்றுக் கொண்டனவற்றை பின்பற்றுபவர்களாகவும் காலச்சூழலுக்கு ஏற்ப நிகழும் தன்னிச்சையான மாற்றங்கள் வாழ்வியலுடன் பொருந்தும்போது இணைத்துக்கொள்பவர்களாகவும் உள்ளனர். இவ்வாறு சமூகம் ஏற்றுக் கொண்டவை வழிவழி வந்தவையாக மட்டுமல்லாமல் அரசியல் அதிகாரம் ஒன்றை சட்டமாக்கி அதை தொடர்ந்து நிகழ வைப்பதின் வழியும் சமூகம் ஒரு மாற்றத்தை சுவீகரித்துக்கொள்வதை வரலாற்றில் காண முடிகிறது.

இதன் அடிப்படையில் தமிழ்ப்புத்தாண்டு குறித்த விவாதங்களைக் கவனிக்கும் போது, தை முதல் நாளை தமிழ்ப்புத்தாண்டு என்று நிறுவும் தரப்பு, சித்திரைப் புத்தாண்டு (சாலிவாகனன் ஆண்டு) ஆரிய கூறுகளைக் கொண்டது என்று கூறுகின்றது. ஆரியர் தமிழர் மீது செலுத்திய ஆதிக்கத்தின் நீட்சியே சித்திரைப் புத்தாண்டின் அடிப்படை என்பது அவர்கள் தரப்பு. இதற்கான சான்றுகளாக, ஆண்டுகளின் பெயர்கள், ஆண்டுகளின் தோற்றம் பற்றிய புராண கதை போன்றவற்றை முன் வைக்கின்றனர். ஆகவே வைதீக சார்பற்ற பொங்கல் விழாவைத் தமிழ்ப்புத்தாண்டாக முன்னெடுக்கும் முயற்சி திமுக அரசால் அதிகாரப்பூர்வமாக்கப்பட்டு பின்னர் நீக்கப்பட்டுள்ளது.

பொங்கல் பண்டிகை இந்துமதத் தாக்கம் அற்ற, தமிழர்களின் மரபு வாழ்வியலோடு நெருங்கிய தொடர்புடைய விழா என்று தெளிந்த திராவிட அரசியல் கட்சிகள் பொங்கலை முதன்மைபடுத்தி பரப்புரைகள் செய்தன. திராவிட கட்சிகளின் கொள்கைகளுக்கு ஏற்ற கூறுகளைப் பொங்கல் கொண்டிருந்ததால் அப்பண்டிகையை அக்கட்சிகள் ஏற்றுக் கொண்டன. ஆனால், தொடக்க காலத்தில், பொங்கல் பண்டிகையைத் தனித்து சிறப்பிக்கும் ஆரம்பக்கட்ட முயற்சிகளை எடுத்தவர்கள் தமிழிய சிந்தனையாளர்கள்தான். மறைமலையடிகள், திரு.விக, தொ.பொ.மீனாட்சி சுந்தரம் போன்றவர்கள் பொங்கல் பண்டிகையைத் தனித்தமிழ் இயக்கத்தின் ஒரு பகுதியாகவே கருதினர். வடமொழி கலப்பற்ற தனித்தமிழ் பற்றிய சிந்தனையின் விரிவாக்கம் வடவர் பண்பாடுகளைத் தமிழர் வாழ்வியலில் இருந்து முற்றாக விலக்குவதை உச்சநோக்கமாக கொண்டிருந்தது. 1930களில், தமிழ் இசை, தமிழ்த் திருமணம், தமிழ்மறை என்று பல புதிய நெறிகள் முன்வைக்கப்பட்டன அல்லது மீட்டுருவாக்கம் செய்யப்பட்டன.  இதன் உச்சமாக தமிழர் சமயம் என்ற புதிய சமயக் கோட்பாடு வரையப்பட்டுள்ளது.

அச்சூழலிலேயே தமிழர் பண்டிகை என்ற தனித்துவத்துடன் பொங்கலை முன்னெடுக்க முனைந்துள்ளனர். பொங்கலுக்கு வாழ்த்து சொல்லும் வழக்கத்தை தன் நவசக்தி இதழின் வழி பிரபலப்படுத்தியவர் திரு.வி.க. பிறகு ஈ.வெ.ரா முதற்கொண்டு பலரும் தங்கள் இதழ்களில் பொங்கள் வாழ்த்துகளை எழுதியுள்ளனர். ஒப்பீட்டளவில்  அன்றைய தமிழறிஞர்கள் தற்போதைய தமிழ் உணர்வாளர்களைவிட பல மடங்கு உத்வேகத்துடன் தமிழ் சார்ந்த பல புதிய முயற்சிகளில் மிகத் தீவிரமாக ஈடுபட்டுள்ளது தெளிவாகிறது. இன்று நாம் தமிழ் குறித்து பெருமிதம் கொள்ள, அன்று அவர்கள் கொண்ட செயலூக்கம்தான் காரணம். ஆயினும், தமிழை அடிப்படையாக கொண்டு தமிழ்ச் சான்றோர்கள் முன்னெடுத்த திட்டங்களில் தைப்பொங்கலை தமிழ்ப்புத்தாண்டாக மாற்றும் திட்டம் இருந்ததா என்பதே வரலாற்றுக்கு அவசியமான கேள்வியாகும்.

மறைமலையடிகளும் முதல் பொய்யும்

maraimalai_periyarஇன்று தைப்பொங்கலே தமிழ்ப்புத்தாண்டு என்ற கருத்தை தமிழ் உணர்வாளர்கள் எல்லாருமே வழிமொழிகின்றனர். இக்கருத்தை முன்னிறுத்தும் தரப்புகள் பரவலாக மறைமலையடிகளின் செயல்பாடுகளை தங்களின் வரலாற்று சான்றாக வைப்பதைக் காணமுடிகிறது. ‘1921-ஆம் ஆண்டில் பச்சையப்பன் கல்லூரியில் ஐநூறு தமிழறிஞர்களுடன் விவாதித்து மறைமலையடிகள் பொங்கல் பண்டிகையைத் தமிழ்ப்புத்தாண்டு என்று முன்மொழிந்தார். பிறகு 1935-ஆண்டில் நடந்த மாநாட்டில் மறைமலையடிகள், திரு.வி.க போன்ற பெரும் தமிழ் அறிஞர்கள் ஒன்றுகூடி தை முதல்நாள் தமிழ்ப்புத்தாண்டு என்னும் முடிவை நிலைநிறுத்தினர்.’ என்ற தகவல்கள் ஒவ்வோர் ஆண்டும் தை மாதமும் சித்திரை மாதமும் சமூக ஊடகங்களில் உலவுவதைக் காணலாம். ‘தை முதல் நாளே தமிழாண்டு தொடக்கம் உலகப் பரந்துரை’ (2001) மாநாட்டு மலரின் பல பக்கங்களில் இத்தகவல் ஒரு வரலாற்றுச் சான்று போல் எடுத்தாளப்பட்டுள்ளது. ஆனால் அவற்றின் உண்மைத்தன்மை ஆய்வுக்குரியது. போதுமான ஆதாரங்கள் இல்லாமலும் கிடைக்கின்ற சில ஆதாராங்களை திரித்தும் இத்தகவல் தொடர்ந்து பரப்பப்பட்டு வருகிறது.

1921ஆண்டு மறைமலையடிகள் தமிழ் ஆண்டு தொடர்பான மாநாடு ஒன்றை கூட்டினார் என்பது இன்றுவரை நிரூபணம் அற்ற செவிவழிச் செய்தியாகவே பரவிக்கொண்டுள்ளது. அக்கால கட்டத்தில் ஐநூறு அறிஞர்களை திரட்டுவதில் இருக்கக்கூடிய நடைமுறை சிக்கல்களை சிந்தித்தால் கூட இது ஒரு கற்பனையான தகவல் என்று புரிந்துகொள்ளலாம். மேலும், அப்படி ஒரு மாநாடு நடந்ததற்கான உறுதியான பதிவுகளோ தரவுகளோ இல்லை. மறைமலையடிகள் உட்பட குறிப்பிடப்படும் மாநாட்டில் கலந்துகொண்ட பிற அறிஞர்களோ, எங்குமே அப்படியான தகவலை எழுதி வைக்கவில்லை.  இணையத்தில் கிடைக்கின்ற ஒரு சில பதிவுகளும், நூல்களில் காணப்படும் குறிப்புகளும் மறைமலையடிகள் 1921-ஆம் ஆண்டில் வள்ளுவரை முன்னிறுத்தி தொடர் ஆண்டு ஒன்றை உருவாக்கும் புதிய முயற்சியைத்தான் காட்டுகின்றன.

மறைமலையடிகள் தமிழர் வாழ்வியல் வரலாறுகள் தொடர்பாக பல ஆய்வுகளைச் செய்தவர். அவர் தமிழர் வரலாற்றை நவீன முறையில் வகுத்து தெளிவான காலவரிசையில் சொல்ல இந்தியாவின் பாரம்பரிய ஆண்டு கணக்கிடல் முறை பொருத்தமற்றது என்ற முடிவுக்கு வந்துள்ளார். அவர் வரலாறுகளை நவீன ஆய்வுமுறையில் எழுதவும் ஆய்வுகள் செய்யவும் மேற்கு அறிவுலகம் பயன்படுத்தும் ஆய்வு முறைமைகளை அறிந்துள்ளார்.  அதே அணுகுமுறையில் தமிழ் தொடர்பான ஆய்வுகளையும் முன்னெடுக்க வேண்டிய அவசியத்தை அவர் உணர்ந்திருக்கிறார். அவர் எழுதிய நாற்காட்டி குறிப்புகளில் தமது இருபத்தெட்டாம் வயதில் கரிகாற்சோழனின் காலத்தை துல்லியமாக ஆய்ந்து கணக்கிட்ட தகவலைக் காணமுடிகின்றது. மகாபாரதப் போர் நடந்த காலத்தைக் கணக்கிட்டு ஆராய்ந்த தகவல் உள்ளது. ‘மாணிக்கவாசகர் வரலாறும் காலமும்’ என்ற நூலையும் கால ஆய்வுகள் செய்து எழுதியுள்ளார். சிலப்பதிகாரத்தின் காலம் கி.பி 2 என்ற முடிவுக்கு வந்துள்ளார்.  ஆகவே, இது போன்ற ஆய்வுச்செயல்பாடுகளின் தொடர்ச்சியாக,  பல்வேறு ஆய்வுகளின் வழி திருவள்ளுவரின் பிறப்பு ஆண்டை அவர் கி.மு 31 என்று கணித்திருக்கிறார். அதாவது திருவள்ளுவரின் வயதை அறிய சமகால ஆங்கில ஆண்டுடன் 31-ஐச் சேர்க்கவேண்டும். இதையே அவர் திருவள்ளுவர் ஆண்டு என்று குறிப்பிடுகிறார். 1921-ஆம் ஆண்டு மறைமலையடிகள் தமிழறிஞர்களுடன் கலந்துரையாடி அனைவருக்கும் விளக்கியது, வள்ளுவரின் பிறப்பு ஆண்டு குறித்த கணிப்பு மட்டும்தான். ஆனால் அது ஐநூறு பேர் கூடிய பொங்கல் புத்தாண்டு மாநாடு என்று பின்னர் திரிக்கப்பட்டது.

சுழல் முறையில் வருடங்களை அமைத்துக் கொள்வது பண்டைய அரசுகளின் வழக்கமாக இருந்துள்ளது.  இந்தியாவைப் போன்றே வேறு பல இன மக்களும் சுழல் முறையில் வருடங்களை அமைத்துக் கொண்டுள்ளனர். ஆசிய கண்ட, இந்து பெளத்த அரசுகள் பலவும் சுழல்முறை ஆண்டுகளைப் புலங்கியிருக்கின்றன. சீனர்கள் இன்றும் தங்களது பன்னிரெண்டு வருட சுழல் முறை ஆண்டைப் பண்பாட்டு அடையாளமாக கொண்டுள்ளனர். இந்திய துணைகண்டத்தின் பல்வேறு இனங்களும், மெசாபோத்தாமியா, சீனா போன்ற பழைமையான நாடுகளும் சுழல்முறை ஆண்டையே பின்பற்றின. அதிலும் அறுபது என்ற எண் முற்காலத்தில் கணிதத்தில் மிகவும் முக்கியத்துவம் பெற்ற எண் என்பது வரலாறு. அதன் எச்சமாக நாம் இன்றும் அறுபது விநாடிகளை ஒரு நிமிடமாகவும், அறுபது நிமிடங்களை ஒரு மணி நேரமாகவும் பயன்படுத்தி வருகிறோம்.

ஆயினும் நவீன வரலாற்றாசிரியர்கள் காலங்களை குறிக்க பொதுவான தொடர் ஆண்டுகளைப் பயன்படுத்துவது வழமை. ஆகவே ஆங்கிலத்திலும் இஸ்லாமிய முறையிலும் குறிக்கப்படும் தொடர் ஆண்டுகளின் சாதகங்களை மறைமலையடிகள் நன்கு உணர்ந்துள்ளார். கிருஸ்துவர்கள் ஏசுவின் பிறப்பை தொடக்கமாக கொண்டு தங்கள் ஆண்டை தொடங்குகின்றனர். அறிவுலகமும் அவ்வாறான காலவரிசையையே ஏற்றுக்கொண்டுள்ளது. வரலாற்று சம்பவங்களை கிருஸ்துவுக்கு முன்(B.C) கிருஸ்துவுக்குப்  பின் (A.D) என பகுத்துக் கூற இலகுவாக இருப்பதை நாம் உணரலாம். இஸ்லாமியர்கள் நபிகள் நாயகமும் அவர்தம் சீடர்களும் மெக்காவில் இருந்து யத்ரிப்புக்கு (மதினாவுக்கு) பெயர்ந்து சென்ற சம்பவத்தை தங்கள் ஆண்டுக்கான தொடக்கமாக கொண்டு கணக்கிடுகின்றனர். இஸ்லாமிய பெருமிதம் உலகலாவ பரவியதன் குறியீடாக இந்த ஹிஜ்ரா தொடர் ஆண்டு முறை அமைந்துள்ளது. இரண்டாம் இஸ்லாமிய பெருந்தலைவரான சைடினா உமார் அல்கத்தாப் ஹிஜ்ரா ஆண்டு முறையை உருவாக்கினார். ஹிஜ்ரா ஆண்டு முறையானது ஆங்கில ஆண்டுக்கு 622 ஆண்டுகள் பிந்தியதாக அமைந்துள்ளது. அதாவது ஆங்கில ஆண்டில் இருந்து 622-ஆண்டுகளைக் கழிக்க வேண்டும். ஏசு கிருஸ்து பிறந்த 622 ஆண்டுகள் கழித்து ஹிஜ்ரா சம்பவம் நடந்ததாக நாம் வரிசைப்படுத்தி புரிந்து கொள்ளலாம். எனவே தமிழிலும் இதுபோன்ற ஒரு தொடர் ஆண்டு இருக்கவேண்டும் என்று மறைமலை போன்ற மொழி அறிஞர் சிந்தித்திருப்பதில் சந்தேகம் இல்லை.  அதன் அடிப்படையில் பொதுவான ஆளுமையை மையமாக நிறுவி தொடர் ஆண்டு ஒன்றை உருவாக்கும் முயற்சியில் மறைமலையடிகள் ஈடுபட்டுள்ளார்.

திருவள்ளுவர் ஆண்டு என்ற முறையை அக்கால அறிஞர் பெருமக்களுடன் கலந்தாய்ந்து சில முடிவுகளுக்கும் வந்துள்ளார். அதன் படி ஏசு கிருஸ்துவுக்கு, முப்பத்தோரு ஆண்டுக்கு முன் வள்ளுவரின் பிறப்பை வகுத்து அதுவே திருவள்ளுவர் ஆண்டின் தொடக்கம் என்ற புதிய முறையை வகுத்துள்ளார். இதன் வாயிலாக வரலாற்று சம்பவங்களை வள்ளுவருக்கு முன் (வ.மு) வள்ளுவருக்குப் பின் (வ.பி) என்ற ஆண்டு வரிசையில் அமைத்துக் கூற முடியும்.

மறைமலையடிகள் திருவள்ளுவர் ஆண்டு என்ற புதிய தொடராண்டை அறிமுகம் செய்த போதும் தை மாதத்தை அதன் தொடக்கமாகவும் மார்கழியை அதன் இறுதியாகவும் நிறுத்தியதாக கூறப்படுவது ஆதாரமற்றது. திருவள்ளுவர் ஆண்டை ஆங்கில ஆண்டுடன் 31 ஆண்டுகள் சேர்க்க வேண்டும் என்பது விதியாக உள்ளதால், அதை ஆங்கில ஆண்டு தொடக்கத்திலேயே செய்து கொள்ளலாம் என்பதை நாம் புரிந்துகொள்ளலாம். அல்லது அக்கால கட்டத்தில் திருவள்ளுவர் பிறந்த தினமாக வழங்கப்பட்ட வைகாசி அனுட்டத்தில் இருந்து தொடங்குதல் ஏற்புடையதாக இருக்கும். அவ்வாறில்லாமல், தை முதல் நாளை திருவள்ளுவர் ஆண்டின் தொடக்கமாக வைத்தது மறைமலையடிகளுக்கு பின்வந்த சிலர் எடுத்த முடிவாக இருக்கலாம். முன்பே கூறியது போல் ஆங்கில ஆண்டுடன் 31 ஆண்டுகளை சேர்க்க வேண்டிய விதியின் படி ஆங்கில ஆண்டு தொடக்கமும் தைப்பொங்கல் தினமும் பதினாங்கு நாள் வேறுபாட்டில் இருப்பதால் இப்படியான ஏற்பாடு செய்யப்பட்டிருக்கக் கூடும். ஆங்கில புத்தாண்டிலேயே தமிழ் தொடராண்டையும் தொடங்குவதை விட தமிழர்கள் நன்கு அறிந்த மரபான விழாவான பொங்கலில் தொடங்குதல் எளிமையானதும் தனித்துவமிக்கதாகவும் அமைந்திருக்கும் என்னும் முடிவுக்கு அவர்கள் வந்திருக்கக்கூடும். எப்படியும், மறைமலையடிகள் முன்வைத்த திருவள்ளுவர் ஆண்டு என்பதை தை முதலாம் தேதி தொடங்கும் புத்தாண்டாக அவர் அமைக்கவில்லை என்பது தெளிவு.

திருவள்ளுவர் தினம் அல்லது வைகாசி அனுட்டம்  

கடந்த நூற்றாண்டில் வைகாசி அனுட்டம்தான் வள்ளுவர் தினமாக கொண்டாடப்பட்டது. அதாவது வள்ளுவர் பிறந்த நாள் என்பது வைகாசி அனுட்டத்தில் வழங்கப்பட்டது. 1971-ஆம் ஆண்டு வரை திருவள்ளுவர் பிறந்த நாள் அல்லது திருவள்ளுவர் தினம் என்பது வைகாசி அனுட்டமாகத்தான் இருந்துள்ளது. சி.என் அண்ணாதுரை தமிழ் நாட்டின் முதல்வராக இருந்த போது, வைகாசி அனுட்டத்திற்கு (திருவள்ளுவர் தினம்) பொதுவிடுமுறை கேட்டு கோரிக்கைகள் வைத்துள்ளார். வைகாசி அனுட்டம் என்பது ஆங்கில நாட்காட்டியில் மே அல்லது ஜூன் மாதங்களில் வரும் ஒரு தினமாகும். ஆகவே, மறைமலையடிகள் முன்வைத்த திருவள்ளுவர் ஆண்டு வைகாசி அனுட்டத்தில் இருந்து தொடங்குதல்தான் முறையானதாக இருந்திருக்கும் ஆனால் அப்படி செய்யப்படவில்லை. மு.கருணாநிதி ஆட்சியில் இருந்த காலத்தில் திருவள்ளுவர் தினம், வைகாசி அனுட்டத்தில் இருந்து தை இரண்டாம் நாளுக்கு மாற்றப்பட்டு தை இரண்டாம் நாள் திருவள்ளுவர் தினமாக கொண்டாடப்பட்டது.

1935-ஆண்டு ‘திருவள்ளுவர் திருநாட் கழகம்’ என்ற அமைப்பை நிறுவி சில தமிழ் அறிஞர்கள் மரபாக திருவள்ளுவர் பிறந்த தினமாக அனுசரிக்கப்பட வைகாசி அனுட்டத்தை சிறப்பாக கொண்டாட முடிவு செய்து அதன்படி விழா எடுத்தனர். தொடர்ந்து சில ஆண்டுகள் நடைபெற்ற அவ்விழாவுக்கு மறைமலையடிகள் முதல் ம.பொ.சி, ஈ.வெ.ரா, என அப்போதிருந்த பல தலைவர்களும் ஆதரவு வழங்கியுள்ளனர். ஆனால் சில காலத்துக்குப் பிறகு அந்த விழா தொடரப்படாமல் இருந்தது. பிறகு 1952-ஆம் ஆண்டு யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த தமிழ்ப்புலவர் கா. பொ. இரத்தினம் தன் சொந்த முயற்சியில் திருவள்ளுவர் தினத்தைக் உலகலாவிய தினமாக கொண்டாட முடிவு செய்து தமிழ்மறை கழகம் என்ற அமைப்பை உருவாக்கி அதற்கான திட்டங்களை வரைந்தார். அப்போது அவர் தமிழ்நாட்டில் இருந்த பல அறிஞர்கள், இதழாலாளர்கள் பலருக்கும் கடிதம் எழுதி வைகாசி அனுட்டத்தில் உலகலாவிய அளவில் திருவள்ளுவர் தினம் கொண்டாடும் திட்டம் பற்றி கருத்து கேட்டுள்ளார். அதற்கு குன்றக்குடி அடிகளார், ர.பி சேதுப்பிள்ளை, மு.வ, என பல அறிஞர்களும் கொடுத்திருக்கும் பதில் மிகத்தெளிவாக வள்ளுவர் தினம் என்பது வைகாசி அனுட்டம்தான் என்று குறிப்பிடுகிறது. மூன்று ஆண்டுகள் இவ்விழா உலகில் தமிழர்கள் வாழும் பல நாடுகளில் முன்னெடுக்கப்பட்டுள்ளது. கோலாலம்பூரிலும் சிங்கையிலும் வைகாசி அனுட்டத்தில் திருவள்ளுவர் தினம் கொண்டாடப்பட்டதற்கான ஆதாரங்கள் கிடைக்கின்றன. ஆனால் சில ஆண்டுகளுக்குப் பிறகு, கி.ஆ.பெ. விசுவநாதன், திருவள்ளுவர் தினத்தை வைகாசி அனுட்டத்தில் இருந்து மாற்றி தைத்திங்கள் இரண்டாம் நாளுக்குக் கொண்டுசெல்லும் திட்டம் ஒன்றை முன்மொழிந்தார். அவர் கூறிய அத்திட்டத்திற்கான காரணம் தெளிவாக அறியக் கிடைக்கவில்லை. ஆனால், அவரது கருத்துக்கு கா. பொ. இரத்தினமும் அவருடன் இருந்த பல தமிழ் அறிஞர்களும் கடுமையாக எதிர்வினையாற்றி மறுத்துள்ளனர். அதன் பிறகு அத்திட்டம் கிடப்பில் போடப்பட்டு 1971-ல் தமிழ் நாட்டு அரசால் அதிகாரப்பூர்வமாக தை இரண்டாம் நாளுக்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

மறைமலையடிகள் தனித்துவமான ஆண்டு வரிசை ஒன்றை அறிமுகப்படுத்த முனைந்ததும் அதை திருவள்ளுவரை மையமாக கொண்டு நிறுவியதும் தெளிவாகிறது என்றாலும், தைப்பொங்கலோடு அதை அவர் தொடர்புபடுத்தவில்லை. அவரின் நோக்கும் வரலாற்று ஆய்வுக்கு ஏற்ற ஒரு காலவரிசையைத் தமிழிய அடிப்படைகளுடன் அமைக்க வேண்டும் என்பதாகத்தான் இருந்துள்ளது.


பொங்கல் பண்டிகையும் இரண்டாவது பொய்யும்

1935-ஆம் ஆண்டில் தமிழரிஞர்கள் ஒன்று கூடும் பல கருத்தரங்குகள் நடந்துள்ளதற்கான பதிவுகள் கிடைக்கின்றன. திருவள்ளுவர் தினம் தொடர்பான கூட்டங்களும் பொங்கல் விழா கூட்டங்களும் பல இடங்களில் நடந்துள்ளன. அவற்றில் திருச்சியில் நடந்த ‘அகில தமிழர் மாநாடு’ என்ற கூட்டமும் அடங்கும். இந்த அரங்கில் மறைமலையடிகள், திரு.வி.க போன்ற அறிஞர்களுடன் அப்போது சமூக மாற்றங்களை உரக்க பேசிக்கொண்டிருந்த ஈ.வெ.ராவும் கலந்து கொண்டிருக்கிறார். இந்த மாநாட்டில் மறைந்த கவிஞர் கா.ப.சாமி தனது 19வது வயதில் கலந்து கொண்ட அனுபவத்தை நேர்காணல் ஒன்றில் விளக்கியிருக்கிறார். அதன்படி, அந்தக் கருத்தரங்கின் மைய நோக்கம் தைப்பொங்கல் சமயம் சார்ந்த பண்டிகையா? இல்லையா? என்பதை முடிவு செய்வதாக இருந்துள்ளது. இங்கு நாம் புரிந்து கொள்ள வேண்டிய ஒன்று உள்ளது. அன்றைய தமிழர் பண்டிகைகள் அனைத்துமே இந்துப் பண்டிகைகளாகவே இருந்தன. பொதுவாக சமய மறுப்பையும், குறிப்பாக வைதீக மத எதிர்ப்பையும் முன்வைத்து இயங்கிய ஈ.வெ.ரா, தமிழர்கள் அக்காலத்தில் கொண்டாடிய எல்லா பண்டிகைகளையும் கடுமையாக விமர்சித்து மறுத்துவந்தார். தீபாவளி, கார்த்திகை என பல பண்டிகைகள் தமிழர்களுக்கு எதிரான அரசியலைக் கொண்டவை என்ற கருத்து வேகமாக பரவிக் கொண்டிருந்தது. ஆனால், பொங்கல் பண்டிகையை அப்படி ஒரேயடியாக மறுக்க முடியாத நிலை இருந்தது. தலைவர்களிடையே ஏற்பும் மறுப்பும் இருந்துள்ளது. பொங்கல் சமய சார்புகளுக்கு அப்பாற்பட்ட பண்டிகை என்னும் கருத்து தமிழறிஞர்களிடம் வலுவாக இருந்தது. அதே சமயம் தைப்பொங்கலை மகர சங்கராந்தி என்னும் வடநாட்டு விழாவோடு தொடர்புபடுத்தி வாதிட்டவர்களும் இருந்தனர். ஈ.வெ.ராவால் நிலையான முடிவுக்கு வரமுடியவில்லை.

ஆகவே திருச்சி மாநாட்டில் பொங்கல் பண்டிகையின் சமய நிலைபாடு குறித்து தீவிரமாக ஆராயப்பட்டுள்ளது. கடுமையான வாக்குவாதங்கள் நடந்துள்ளன. அதன் இறுதியில் மறைமலையடிகளும் திருவிகாவும் பொங்கல் பண்டிகை சமயம் சாராத பண்டிகை என்பதற்கான ஆதாரமாக, அதற்கு பிற பண்டிகைகள் போன்ற புராண கதைகளோ, புராணத்தில் இடமோ, சடங்குகளோ இல்லாமல் இருப்பதைச் சுட்டிக்காட்டி தங்கள் தரப்பைத் தெளிவுபடுத்தியுள்ளனர். ஈ.வெ.ராவும் இக்கருத்தை ஏற்றுக் கொண்டு பொங்கல் சமய அடையாளங்கள் அற்ற தமிழர் பண்பாட்டு பண்டிகை என ஒப்புக்கொண்டுள்ளார். அதன் பிறகே திராவிட கழகம் பொங்கல்விழாவுக்கு முக்கியத்துவம் கொடுத்துள்ளது. ஆகவே 1935-ஆம் ஆண்டு கருத்தரங்கும் சித்திரைப் புத்தாண்டுக்கு மாற்றாக பொங்கலை நிறுத்தும் முயற்சிக்காக நடத்தப்பட்டது அல்ல. அப்படியான கருத்தே அங்கு முன்வைத்து பேசப்படவில்லை என்பதையே கா.ப.சாமியின் நேர்காணல் காட்டுகிறது. தைப்பொங்கல் சமய சார்பற்ற தமிழரின் பண்பாட்டுப் பண்டிகை என்பதை தமிழறிஞர்களும் திராவிட கருத்தியலாளர்களும் ஒருமுகமாக ஏற்கும் கருத்தரங்காகவே 1935-ஆம் ஆண்டு திருச்சி ஒன்றுகூடல் அமைந்துள்ளது.

மறைமலையடிகளின் நாட்குறிப்புகள்

maraimalaiadikal01

மறைமலையடிகள்

மறைமலையடிகள் தன் வாழ்நாளில் நாற்பது ஆண்டுகளுக்கும் மேலாக நாட்குறிப்பு எழுதும் பழக்கத்தைத் தொடர்ந்திருக்கிறார். அவரின் மகன் வழி பேரன் பேரா.மறை.தி.தாயுமானவன் (மறை. திருநாவுக்கரசரின் மகன்) 2018-ல் மறைமலையடிகளின் நாட்குறிப்பின் உள்ளடக்கங்களைத் தொகுத்து ‘மறைமலையடிகளாரின் அடிச்சுவட்டில்’ என்ற நூலாக வெளியிட்டுள்ளார். ஆண்டுவாரியாக மறைமலையடிகளின் நாட்குறிப்பின் தேர்வுசெய்த உள்ளடக்கங்கள் அந்நூலில் உள்ளன. பல வரலாற்றுச் சம்பவங்களை அதில் இருந்து அறிய முடிகிறது.  ஆயினும் 1921ஆம் ஆண்டு கருத்தரங்கு பற்றிய தகவலோ, 1935-ஆம் ஆண்டு கருத்தரங்கு பற்றிய தகவலோ இடம்பெறாதது வியப்பாக உள்ளது. தமிழ் உணர்வாளர்கள் பலரும் சட்டென சுட்டும் மேற்கண்ட ஆண்டுகள் குறித்த தகவல்கள், அதிலும் மறைமலையடிகள் நேரடியாக பங்காற்றியுள்ளதாக கூறப்படும் கருத்தரங்குகள் பற்றிய தகவல்கள் நிச்சயம் அவரது நாட்குறிப்பில் விடுபட்டிருக்காது. ஆகவே அப்படியான மாநாடுகள் ஏதும் நடக்கவில்லை என்ற எளிய முடிவுக்கு நாம் வரலாம். அல்லது மாநாடுகள் நடைபெற்றிருந்தாலும், மறைமலையடிகளின் பேரன் தெரிந்தே இந்த தகவல் மறைப்பை செய்கிறார் என்றும் நாம் முடிவுசெய்யலாம். காரணம் குறிப்பிடப்படும் கருத்தரங்குகளில் பேசப்பட்டவை இன்று பகிரப்படும் தகவல்களில் இருந்து முற்றாக வேறானவையாக இருக்கக்கூடும்.  அல்லது திருவள்ளுவராண்டு குறித்த இன்றைய பொதுவான கண்ணோட்டத்திற்கும் புரிதலுக்கும் முரணான தகவல்களை மறைமலையடிகளின் நாட்குறிப்பு கொண்டிருக்கலாம். ஆகவே, அவரின் நாட்குறிப்பில் முக்கியத்துவம் பெறாத 1921, 1935ஆம் ஆண்டு மாநாடுகளை மீண்டும் மீண்டும் சொல்லி தமிழ்ப்புத்தாண்டை தைப்பொங்கலோடு பிணைப்பது வரலாற்று திரிபு என்பதில் சந்தேகம் இல்லை.

மலேசியாவில் தமிழ்ப்புத்தாண்டு

இரா.திருச்செல்வம்

மலேசிய தமிழியச் சிந்தனையாளர், இரா.திருச்செல்வம் ‘பொங்கல் தமிழ்ப்புத்தாண்டுக் கொண்டாட்டம்’ என்ற நூல் ஒன்றை எழுதியுள்ளார். அந்த நூலில் திருவள்ளுவர் ஆண்டு பற்றிய வரலாற்று தகவல்கள் முழுமையாக இல்லை. திருவள்ளுவராண்டு உருவாக்கத்தில் மறைமலையடிகளின் பங்கு பற்றிய எந்தத் தகவலும் இடம்பெறவில்லை. மறைமலைகள் முன்வைத்த திருவள்ளுவர் ஆண்டோடு தைப்பொங்கலை தொடர்புபடுத்துவதில் உள்ள முரணை உணர்ந்தவர் போல் அதுபற்றிய விளக்கங்களே இல்லாமல் நூல் எழுதியிருக்கிறார். தைப்பொங்கல், வானியல் அடிப்படையில் தமிழர் புத்தாண்டாக அமைய எவ்வகையில் ஏற்றது என்ற விளக்கங்களும் பொங்கலை புத்தாண்டாக ஏற்றுக் கொண்டாடும் வழிமுறைகள் பற்றிய சடங்கு முறைகளும் விரிவாக உள்ள நூலில் தமிழ்ப்புத்தாண்டு குறித்த அடிப்படை சந்தேகங்களுக்கு விளக்கம் கொடுக்கப்படவில்லை. பொங்கலை வானியல் அடிப்படையில் புத்தாண்டாக தகவமைக்கும் அதே வானியல் சான்றுகளை, சித்திரை புத்தாண்டுக்கும் வகுத்துக் கொள்ளமுடியும் என்பதால் நூலாசிரியர் இர. திருச்செல்வத்தின் நிலைபாடுகள் உணர்ச்சியின் அடிப்படையில் கட்டியெழுப்பப்பட்ட கருத்துகளாகவே உள்ளன.

2001 ஆண்டில் கோலாலம்பூரில் மலேசிய தமிழ்நெறிக் கழகம், மலேசிய திராவிடர் கழகம், மற்றும் மலேசிய பண்பாடு இயக்கம் ஆகிய அமைப்புகள் பிற அமைப்புகள் பலவற்றுடன் ஒன்று சேர்ந்து ‘தை முதல் நாளே தமிழாண்டுத் தொடக்கம் உலக பரந்துரை மாநாடு’ ஒன்றை கோலாலம்பூரில் நடத்தியுள்ளன. தைமுதல் நாளை தமிழர் புத்தாண்டாக உலக தமிழர்கள் அனைவரும் ஏற்று பின்பற்ற வேண்டும் என்பதை கோரும் அடிப்படை நோக்கத்தோடு நடத்தப்பட்ட மாநாட்டு மலரில், தைமுதல் நாளை புத்தாண்டாக முன்வைக்கூடிய வரலாற்று சான்றுகள் இடம்பெறவில்லை. புனைவுத்தன்மையோடும் உணர்ச்சிப் பெருக்கோடும் எழுதப்பட்டுள்ள பல பத்திகள், பதிவுகளினின் ஊடே ஈ.வெ.ராவின் கையெழுத்தில் எழுதப்பட்ட பொங்கல் வாழ்த்து மடலும் உள்ளது

1952ஆம் ஆண்டு ஈ.வெ.ரா எழுதிய பொங்கல் வாழ்த்து மடலில் பொங்கல் தமிழின ஒன்றுமைக்கான சிறந்த பண்டிகை என்ற விளக்கம் மட்டுமே உள்ளது மாறாக தைமுதல் நாளை புத்தாண்டாக ஓரிடத்திலும் குறிப்பிடவில்லை. க.பா.சாமி பொங்கல் சமயவிழா அல்ல என்பதை மட்டுமே தெளிவு படுத்துகிறார். ஆகவே மாநாட்டு நோக்கத்துக்கு கொஞ்சமும் வலுசேர்க்காத படைப்புகளுடன் இந்த மாநாட்டு மலர் படைக்கப்பட்டுள்ளது. உண்மையில், தைமுதல் நாளை மறைமலையடிகள் முதற்கொண்டு பல தமிழறிஞர்களும் ஏற்றுக் கொண்டனர் என்பது உண்மையானால், அதை வரலாற்றுச் சான்றுகளுடன் ஐயம்திரிபட விளக்கியிருக்க வேண்டிய களம் இந்த மாநாட்டு இதழ்தான். ஆனால் அப்படியான தெளிவுகளை இந்நூலில் காணமுடியாததால், மேற்கூறப்படும் ஆண்டுகளும் மாநாடுகளும் போலியான சோடனைகள் என்ற முடிவுக்கே வரவேண்டியுள்ளது.

முடிவு

கடந்த இருபது ஆண்டுகளாக திராவிட அமைப்புகளும் தமிழிய அமைப்புகளும் பொங்கலை தமிழ்ப்புத்தாண்டாக மாற்றும் முயற்சியில் தீவிரம் காட்டி வருகின்றன. அதே சமயம் சித்திரைப் புத்தாண்டு தமிழர்க்கு விரோதமானது என்ற கருத்தும் முன்வைக்கப்படுகிறது. திராவிட அமைப்புகள் தங்களின் வைதீக எதிர்ப்பின் அடையாளமாகவும் இறைநீக்க, இறை மறுப்புவாதங்களின் அடையாளமாகவும் தைமுதல் நாளை தமிழ்ப்புத்தாண்டு என்று வலியுறுத்துகின்றன. தமிழிய அமைப்புகள் ஆரிய எதிர்ப்பு வடமொழி எதிர்ப்பு போன்ற பின்னணிகளில் பொங்கல் தினத்தைத் தமிழ்ப்புத்தாண்டாக கொண்டாட வழியுறுத்துகின்றன. மலேசியாவிலும் பல தனிநபர்களும் மொழிசார்ந்த அமைப்புகளும் தைப்புத்தாண்டைத் தொடர்ந்து ஆதரிக்கின்றன. ஆயினும் மொழி உணர்வு சார்ந்து மட்டுமே செயலாற்றாமல் வரலாற்றுத் தெளிவுடனும் செயல்படுவதே விவேகமாகும். .


மரபான தமிழர் வாழ்வில் தைப்பொங்கலும் சித்திரைப் புத்தாண்டும் தனித்தனி பண்டிகைகளாக நிலைகொண்டுவிட்டவை. அவை வெவ்வேறு சடங்குகள், வரலாறு, தாத்பரியம் கொண்டவை. முன்னோர் பொங்கலை கொண்டாடிய அதே மகிழ்ச்சியோடு சித்திரைப் புத்தாண்டையும் கொண்டாடியுள்ளனர். அவர்களுக்கு அதில் எந்தக் குழப்பமும் இல்லை. தன் எழுபத்தைந்து ஆண்டு கால வாழ்கையில், பலநூறு நூல்களையும் கட்டுரைகளையும் எழுதியுள்ள மறைமலையடிகள் பொங்கலை தமிழ்ப்புத்தாண்டு என்று விளக்கும் நூல்களோ கட்டுரைகளோ எழுதவில்லை. அவர் காலத்தவரும் அவரோடு பழகியவருமான திரு.வி.க பொங்கலின் பண்பாட்டு முக்கியத்துவத்தை விளக்கும் குறிப்புகளை தனது நவசக்தி இதழில் எழுதினார். ஆனாலும் அவை பொங்கலை தமிழர் புத்தாண்டு என்ற புது விளக்கங்களைக் கொடுக்கவில்லை.


பொங்கலை முன்னெடுத்த தமிழறிஞர்கள் அதை தமிழர்களின் மரபான பண்பாட்டு பண்டிகையாகத்தான் முன்னெடுத்தனர். சித்திரைப் புத்தாண்டுக்கு மாற்றாக அல்ல. மேலும் அவர்கள் காலத்தில் சித்திரை முதல்நாளை தமிழ்ப் புத்தாண்டாக கொண்டாடினார்களோ இல்லையோ நிச்சயமாக பொங்கல் விழாவைத் தமிழ்ப்புத்தாண்டாக கொண்டாடியதில்லை.


தமிழ்ச் சமூகத்தை இந்து மத கட்டுகளில் இருந்து விலக்குவதில் முனைப்போடு செயல்பட்ட திராவிட கட்சிகள் பொங்கல் பண்டிகையில் இயல்பாக குறைந்து காணப்பட்ட வைதீக தாக்கத்தை தங்களுக்குச் சாதகமாக பயன்படுத்தினர். 50ஆம் ஆண்டுகளில் தமிழ் நாட்டில் முன்னெடுக்கப்பட்ட மதமேலாண்மைக்கு எதிரான திட்டங்களில் இதுவும் ஒன்று என்பது மிக தெளிவாக புரிந்துகொள்ளக் கூடியதே. ஆகவே தமிழ் அறிஞர்கள் தமிழினத்தின் பண்பாட்டு விழாவாக முன்னிறுத்திய பொங்கல் விழாவை தமிழ்ப்புத்தாண்டாக மாற்றியவர்கள் திராவிட அரசியல்வாதிகள்தான்.


இன்று அரசியல் காரணமாகவும் இனவாதம் காரணமாகவும் தமிழ்ப்புத்தாண்டை பொங்கலோடு இணைப்பது, சமூகத்தின் கூட்டு மனத்தின் குரலை நசுக்க முனைவதையே காட்டுகிறது. மரபை வலுக்கட்டாயமாக நிராகரிப்பதும் புதுமையைத் திணிக்க முயல்வதும் சமூகத்தின் மேல் அதிகாரத் தரப்பு செலுத்தும் வன்முறைகளாகவே அமையும்.


மேற்கோள்கள்


http://www.viduthalai.in/page1/136322.html

மறை.தி. தாயுமானவன்: 2018 மறைமலையடிகளாரின் அடிச்சுவட்டில்

இர.திருச்செல்வம்: 2016 பொங்கல் தமிழ்ப்புத்தாண்டுக் கொண்டாட்டம்

தை முதல் நாளே தமிழாண்டுத் தொடக்கம் உலகப் பரந்துரை மாநாட்டு மலர்-2001, கோலா லம்பூர்

http://keetru.com/index.php/component/content/article?id=18003

தமிழ்ப்புத்தாண்டு

தமிழர்கள் வரலாற்றில் தமிழ்ப்புத்தாண்டு எது?

வரலாறு.காம் தலையங்கம் கேட்கிறது: ஐந்தாண்டுக்கு ஒரு முறை மாற்றம் ஏன்?

திருவள்ளுவர் ஆண்டு.

வைகாசி அனுடம்



Thursday, May 31, 2018


திருஞானசம்பந்தர் தேவாரம்... தமிழ் தேனமுது!

திருஞானசம்பந்தரின் தேவாரப் பாடல்கள் பலவும் வழிபடுவதற்கும், பாடி மகிழ்வதற்கும் மட்டுமின்றி, தமிழ்ச்சொல்லணி இயலுக்கும் மூலமாகத் திகழ்கின்றன.

திருஞானசம்பந்தப்பெருமான் தமிழில் பல புதிய இலக்கிய வடிவங்களைத் தோற்றுவித்தார் இவற்றை இலக்கண நூலார் மிறைக் கவிகள் சித்திரக் கவிகள் விருந்து வனப்பு என்று பலவாறு அழைக்கின்றனர் திருஞானசம்பந்தர் இதனை விருந்தாய சொல்மாலை என்று தமது பதிகத்தில் குறித்துள்ளார். மொழிமாற்று, மாலைமாற்று... என இதில் பலவகை உண்டு.

மேலும் பாடுவதற்குக் கடினமான, ஞானம் இல்லாத கவிஞர்களால்  இயற்ற முடியாத பாடல்களான  "எழுகூற்றிருக்கை (தேர் போன்ற அமைப்பும்,எண்களைக் கூட்டி பின் குறைத்துப்  பாடுவது),  யாழ்முரி( வீணையில் இசைக்க முடியாதது) , திருத்தாளச்சதி ( பாடல் பாடுவது தாளம் போடுவது போன்றே இருப்பது) , திருவிருக்குறள் ( இரண்டிரண்டு வார்த்தைகளைக் கொண்டு நான்கு அடிகள் உள்ள பாடல்) ,  திருமுக்கால் (இரண்டாம் அடியில் முக்கால் வரிகள் பாடிப், பின் மூன்றாம் அடியில் அதே முக்கால் வரியை முழு வரியாகப் பாடுவது),  திருவியமகம் ( ஒவ்வொரு இரண்டு அடிகளின் கடைசியில் ஒரே வார்த்தையை, வேறு வேறு அர்த்தம் தருமாறு பாடுவது) ,  சக்கரமாற்று (ஒருபாடலின் இறுதியில் சொன்ன பெயரை அடுத்த பாடலின் ஆரம்பத்தில் வைத்துப் பாடுவது),  மாலைமாற்று (முன்னிருந்து பாடினாலும், பின்னிருந்து பாடினாலும் ஒரே வார்த்தை, ஒரே அர்த்தம் தருவது) ,  ஏகபாதம் (நான்கு அடிகள் உள்ள பாடலில் ஒரே வரியையே மீண்டும் மீண்டும் வைத்துப் பாடுவது, ஆனால் ஒவ்வொரு அடியும் வேறு வேறு பொருள் தருவது),  கோமூத்திரி (இரண்டடி செய்யுள்களால் அமைந்து, முதல்  செய்யுளின்  இரண்டாம் அடியை விட்டு அடுத்த செய்யுளின் முதல் அடியைக் கொண்டாலும் அல்லது முதல் செய்யுளின் இரண்டாம் அடியையும், அடுத்த செய்யுளின் முதல் அடியை விட்டு,  இரண்டாம் அடியைக்  கொண்டாலும் அது ஒரு தனிப் பாடலாக, 1ம் 3ம் ஒரு பாடல், 2ம் 4ம் ஒரு பாடல் என்ற முறையில்  அமைவது) 

திருஞானசம்பந்தரின் விருந்தாய சொல்மாலைகளையும் அவற்றின் சிறப்புகளையும் இங்கே காணலாம்
அதில் ஒரு வகை 'கோமூத்திரி அந்தாதி’!

1.  கோமூத்திரி

தண்டியலங்காரத்தில், சித்திரக்கவி வகைகளில் இதுவும் ஒன்று. ஒரு செய்யுளை இரண்டு வரிகளாக எழுதி, மேலும் கீழும் ஒரு எழுத்து விட்டு ஒரு எழுத்து எனச் சேர்த்து வாசித்தாலும், அதே செய்யுளே வரும். பசுவானது நடந்துகொண்டே கோமியம் கழிக்கும்போது, அந்த நீர் விழுந்த தாரையானது மேலும் கீழுமாக நெளிந்த வடிவமாகத் தோன்றுமல்லவா... எனவேதான், இதற்கு 'கோமூத்திரி அந்தாதி’ எனப் பெயர் உண்டானது. அதுவே இரண்டு மாடுகள் கழிப்பதாக இருந்தால் இரு எதிர் எதிர் வளைவுகள் கிடைக்கும். அவ்வமைப்பைச் செய்யுளில் அமைப்பது கோமூத்திரி என்னும் சித்திரகவியாகும். (கோ =பசுமாடு மூத்ரி = மூத்திரம்)

கீழுள்ள பாடலைக் கவனியுங்கள்

பருவ மாகவி தோகன மாலையே

பொருவி லாவுழை மேவன கானமே

மருவு மாசைவி டாகன  மாலையே

வெருவ லாயிழை பூவணி காலமே

இந்தப் பாடல், இரு வரிசையாக 'கோமூத்திரி’ வடிவில் எப்படி இருக்கிறது என்பதை படத்தில் பார்த்து மகிழலாம்.

(1)
முதல் அடி
http://www.tamilvu.org/courses/diploma/a021/a0214/images/a02146pr.jpg
இரண்டாம்அடி


(2)
முதல் அடி
http://www.tamilvu.org/courses/diploma/a021/a0214/images/a02145ma.jpg
இரண்டாம்அடி


(3)
முதல் அடி
http://www.tamilvu.org/courses/diploma/a021/a0214/images/a02146pm.jpg
இரண்டாம்
அடி
முதலடியையும், இரண்டாம் அடியையும் இவ்வாறு கோமூத்திரிச்
சித்திரமாக அமைத்துப் பாடுவது இவ்வகைச் சித்திரக்கவியாகும்.


இதுமட்டுமின்றி, சொல்லணி இயலில் சுவாரஸ்யம் கூட்டும் இன்னும் பல வகை பாடல்கள் உண்டு. வகைகளும் உதாரணப் பாடல்களும் இங்கே உங்களுக்காக...







2.  திருஎழுகூற்றிருக்கை எண் அலங்காரப் பாடல். சித்திரக் கவி.
இந்தப் பாடல் அமைப்பு திருஞானசம்பந்தரால் முதன் முதலாகப் பாடப்பட்டதாகும் இதனைத் தேர்ப் பந்தம் எனவும் அழைப்பர் இது இயற்றுவதற்குக் கடினமானதாகும் 47 அடிகளால் ஆன இதனைத்தினமும் பாராயணம் செய்து ஓதினால் திருஞானசம்பந்தர் அருளிய அனைத்தையும் ஓதிய பலனைத் தருவதாகும் திருஞானசம்பந்தரை அடியொற்றி அருணகிரிநாதர் வண்ணச்சரபம் தண்டபாணி சுவாமிகள் முதலிய மிகச்சிலரே எழுகூற்றிருக்கையைப் பாடியுள்ளனர்.
ஒன்று, இரண்டு, ஒன்று, ஒன்று, இரண்டு, மூன்று, இரண்டு, ஒன்று... என ஒன்று முதல் ஏழு வரையிலும் படிப்படியாக ஒவ்வொன்று ஏற்றியும், இறக்கியும் ஏழு கூறுகளிலும் எண்கள் இருக்க இயற்றப்படும் செய்யுள், எழு கூற்றிருக்கை ஆகும்.

கூறுகளாக அறைகளைக் கீறும்போது...

முதற்கூற்றில் மூன்று அறைகளும்

இரண்டாம் கூற்றில் ஐந்து அறைகளும்

மூன்றாம் கூற்றில் ஏழு அறைகளும்

நான்காம் கூற்றில் ஒன்பது அறைகளும்

ஐந்தாம் கூற்றில் பதினோரு அறைகளும் கீறி, இவற்றை ரதபந்தமாக அமைப்பது வழக்கம்.



3.  யாழ்முரி

திருஞானசம்பந்தரிடம் திருநீலகண்ட யாழ்ப்பாணர் யாழில் அடங்காமல் இருக்கும்படியான இசைப்பாடலை அருளும்படிக் கேட்க அவர் பாடியதே யாழ்முரியாகும் இது தருமபுரத்தில் அருளியதாகும் இதையொட்டி இங்குள்ள சிவபெருமான் யாழ்முரிநாதர் என்று அழைக்கப்படுகின்றார்

4.  மொழிமாற்று

இந்தப் பாடல்களில் உள்ள சொற்களை இடம் மாற்றிக் கொண்டு கூட்டினால்தான் பொருள்தரும் மொழிகளை மாற்றி பொருள் காண்பதால் இது மொழி மாற்று எனப்பட்டது இதில் தமது பாடலை திருஞானசம்பந்தர் ஞானத்தமிழ் என்று குறித்துள்ளார்

காடு அது அணிகலம் கார் அரவம் பதி; கால் அதனில்

தோடு அது அணிகுவர் சுந்தரக்காதினில் தூச்சிலம்பர்;

வேடு அது அணிவர் விசயற்கு உருவம் வில்லும் கொடுப்பர்;

பீடு அது அணிமணி மாடப்பிரமபுரத்து அரரே.


5.  மாலைமாற்று

ஒரு பாடலை முதலிலிருந்து படித்தாலும் இறுதியிலிருந்து தலைகீழாகப் படித்தாலும் ஒரே மாதிரியாக இருப்பதே மாலைமாற்று ஆகும் . மாலைமாற்றுப் பதிகத்தில்,….

யாமாமா நீ யாமாமா யாழீ காமா காணாகா

காணா காமா காழீயா மாமாயாநீ மாமாயா


6.  வழிமொழி திருவிராகம்

இது ஒரு பாடலின் அடி முதற்சீரின் இரண்டாம் எழுத்துப் பின்வரும் சீர்களில் ஒன்றி வழியெதுகையாய் வருவது மேலும் சீர்காழிக்குரிய பன்னிரெண்டு பெயர்கள் வந்த வழியைக் கூறுவது என்பதும் ஆகும் இதனை திருஞானசம்பந்தர் வழிமொழிகள் என்று குறித்துள்ளார்

சீர்காழிக்கு பன்னிரண்டு பெயர்களும் வந்த  வழி- வரலாறு மொழியப்பெறும் பதிகம்... அதாவது வழிகளை மொழிந்த ராகமுடைய பதிகம், 'வழிமொழித் திருவிராகம்’ எனப் பெயர் பெற்றது.

முதற் பாடல், பிரமபுரத்துக்கு (சீர்காழி) பெயர் வந்த வழியைச் சொல்கிறது; 'சுரர், நரர், தரணி, முரண்...’ என 'ர’கரமாக வரும்.

இரண்டாவது பாடல், 'தாணு, வணி, ஆணு, பேணு...’ என 'ண’ கரமாகவும் வரும்.


7.  இருக்குக் குறள்

இருக்கு வேதத்தினைப் போன்று இருசீர் கொண்ட குறளடி நான்கினால் பாடப்பட்டதாதலின் இப்பெயர் பெற்றது ஆகும்.

உதாரணம் :

'அரனையுன்குவீர்...’,

'நீலமிடற்று ஆலவாயன்...’,

'வாசி தீரவே காசு நல்குவீர்...’

'சித்தந்தெளிவீர்காள்...’



8.  ஈரடிமேல்வைப்பு

ஈரடிச் செய்யுள்களின் மேலும் இரண்டு அடிகளை வைத்துப் பாடப்பட்டதால் இப்பெயர் பெற்றது முன் இரண்டடி ஒரு எதுகை சந்தமாகவும் அடுத்த இரண்டடிகள் வேறு எதுகை சந்தமாகவும் அமைவது ஆகும்
உதாரணம்:

'தக்கன் வேள்வி தகர்த்தவன் பூந்தராய்...’

(அடிகள் வெவ்வேறாக வரும்)

கொள்ளம்புதூர் பதிகத்தில் ஒன்றாய் வரும். 'கொட்டமே கமழும்’



9.  நாலடிமேல்வைப்பு

பாடலின் முதல் நான்கு அடிகள் ஓர் அமைப்பிலும், மேல் வைப்பாக வரும் அடிகள் வேறு அமைப்பிலும் வரும். நாலடிச் செய்யுள் மீது மீண்டும் இரண்டு அடிகள் வரும்படிப் பாடியது இதுவாகும்.

உதாரணம் :

இயலிசையெனும் - புகலிப் பதிகம்

வேதவேள்வியை - ஆலவாய்ப் பதிகம்

இடரிலும் தளரினும் - ஆவடுதுறைப் பதிகம்


10.     திருச்சக்கரமாற்று:
சக்கர வடிவமாக அடைத்துச் சுழன்று வருவது போல், சீர்காழியின் 12 பெயர்களுமே மாறி மாறிச் சுழன்று வருவது போல பாடப்பட்டிருக்கும். இது, ஒரு சக்கரத்தைப் போன்று சுழன்று சுழன்று வருவதால் 'சக்கரமாற்று’ எனப்பட்டது.

முதல் திருப்பாட்டில் இறுதியில் வரும் 'கழுமலம் என்றும்’ 2-ம் திருப்பாட்டில் முதலிலும்; 2-ம் பாட்டின் இறுதியில் உள்ள 'தோணிபுரம்’ 3-ம் பாட்டின் முதலிலும் வரும்படி தொடர்ந்து பாடப்பட்டிருக்கும். பன்னிரண்டாம் பாட்டின் இறுதி அடியில் உள்ள 'அயனூர்’ என்பது, பூமகனூர் எனும் திருப்பாட்டின் முதலிலும் வரும். இப்படி, பதிகத்திலுள்ள 12 திருப்பாடல்களும் சீர்காழிக்கு உரிய 12 திருப்பெயர்களால் முன்னும்பின்னுமுள்ள திருப்பாடல்களுடன் இணைந்து, ஒரு வட்டமாகச் செல்வதால் இப்பதிகம் சக்கரம் என்ற பெயர் பெற்றது. உதாரணம்: 'விளங்கிய சீர் பிரமனூர்...’ என்று தொடங்கும் காந்தாரப் பண்.


11.     ஏகபாதம்

ஒரு பாடலின் முதல் அடியிலுள்ள சொற்களே பின்வரும் மூன்று அடிகளிலும் வரிசை மாறாமல் வருவதே ஏகபாதம் எனப்படும்  சொற்கள் ஒன்றாக இருந்தாலும் அடிகள் தோறும் பொருள்கள் மாறிவரும் தன்மை உடையது ஆகும்

12.     ஈரடி: 

இரண்டு அடிகளில் அமையும் பாடல் உதாரணம்: 'வரமதே கொளா...’ - பழம் பஞ்சுரப் பண்.


13.     கூடற்சதுக்கம்

நான்கு தலங்களின் இறைவனை ஒன்றாகப் போற்றுவது மயேந்திரபள்ளி ஆரூர் கயிலை ஆனைக்கா ஆகிய நான்கு தலங்கள் இதில் போற்றப்பட்டுள்ளன ஆகும்

14.     பூட்டுவிற்பொருள் கோள்

இதில் பாடலின் இறுதி அடியை மேலடிகளில் பூட்டிப் பொருள் கொள்வதால் இப்பெயர் பெற்றது ஆகும்


இது போன்ற அரிய பாவகைகள் தேவாரத்தில் நிறைந்துள்ளன. உண்மையான தமிழ் ஆர்வலர்களுக்கு திருஞான சம்பந்தர் தேவாரம் ஒரு பொக்கிஷம். வைகளை அருளிய திருஞானசம்பந்தப் பெருமான் தமிழ் விரகர் என்றே போற்றப்படுகிறார்.